புது தில்லி:
உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் வரை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில் இந்த காலக்கெடுவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் இணைப்புக்கான காலக்கெடு வரும் 31ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதார் திட்டத்துக்கான அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெரிவித்த கருத்தில், ‘ஆதார் தொடர்பான மனுக்கள் மீது மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவு எட்டப்படுவது சாத்தியமில்லை என்று கருதுகிறோம். எனவே, ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். கடைசி நேரத்தில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால், வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறை நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே, அதனைக் கருத்தில் கொண்டு, உரிய காலத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று கூறியிருந்தது.
இந்த அமர்வின் முன்னர், கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ‘ஆதார் தொடர்பான வழக்கு நீண்டகாலம் நடந்து வருகிறது. பல்வேறு நலத் திட்டங்களின் பயன் பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை கடந்த காலத்தில் ஏற்கெனவே சில முறை நீட்டித்துள்ளோம். எனவே, மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வங்கிக் கணக்கு, செல் பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில், வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கினை அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது; எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது -என்று குறிப்பிட்டது.