புது தில்லி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த பேரறிவாளனின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், குற்றவாளி இல்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்க இயலாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த ஜனவரியில் விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, இந்த மனுவை நிராரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
பேட்டரி வாங்கிக் கொடுத்ததை விட கொலைச் சதியில் பேரறிவாளனுக்கு பங்கு உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். இதை அடுத்து, அரசின் வாதத்தை ஆட்சேபிக்க மனுதாரரான பேரறிவாளனிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதா? என மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், மனுதாரர் குற்றவாளி இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இது தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.