புது தில்லி: எதிர்க் கட்சிகள் அமளியால், மக்களவையில் மத்திய பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் காவிரி வாரியம் கேட்டு அதிமுக எம்.பி.,க்களும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேச எம்.பி.,க்களும், நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.,க்களும் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எந்தவித பணிகளும் நடக்காத நிலையில் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் அமளி காரணாக பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், விவாதம் நடத்த வேண்டிய நேரம் குறைவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி, ‘கில்லட்டின்’ முறையை மக்களவையில் கொண்டு வந்து பட்ஜெட்டையும், நிதி ஒதுக்கீடு மசோதாவையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
இந்த முறையை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், பட்ஜெட் மற்றும் நிதி மசோதாவை விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதித்தார். அதன் பின்னர், குரல் ஓட்டெடுப்பில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேறியதாக சுமித்ரா மகாஜன் முறைப்படி அறிவித்தார்.