புதுதில்லி: 2ஜி முறைகேடு வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. தில்லி உயர் நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், தொலைதொடர்புத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 18 பேரை கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி விடுதலை செய்தது சிபிஐ., நீதிமன்றம். ஆனால், இந்த உத்தரவுக்கு சிபிஐ மேல்முறையீடு செய்யும் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கு ஏற்ப, 3 மாத கால இடைவெளி விட்டு, சிபிஐ., நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறையைத் தொடர்ந்து, சிபிஐ., சார்பில் நேற்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தா இதனைத் தெரிவித்தார்.
அமலாக்கத் துறை, சிபிஐ.,யின் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தில்லி உயர் நீதிமன்றம், 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட அனைவரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் மே 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.