வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி ஏய்ப்பு முறைகேடுகள் தொடர்பான தகவல்களில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உட்பட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக வந்த தகவல். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதால், இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
வங்கி அதிகாரிகள் உதவியுடன் நிதி மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிறுவனமான டோடெம் இன்ப்ரா லிட்., (Totem Infrastructure Limited). இந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, டொடெம் இன்ஃப்ரா லிட்., நிறுவனத்தின் உரிமையாளர் சலாலீத், கவிதா ஆகியோர் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, தங்கள் வங்கியில் ரூ.304 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக அளித்த புகாரை அடுத்து சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிறுவனம், சாலைகள் அமைப்பது, குடிநீர் திட்டங்களை மேற்கொள்வது, கட்டுமானங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளைக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று, வாங்கிய கடனை அடைக்காமல் ஏய்த்து வந்தது. அதற்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்கு காட்டி, பணத்தை வேறு வழிகளில் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வட்டி, கடன் ஆகியவற்றைச் செலுத்தாததால், கடந்த 2012 ஜூன் 30ல் வராக்கடனாக வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிபிஐ., இந்நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி மோசடி செய்திருப்பதை வெளிப்படுத்தியது.