புது தில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஏப்ரல் 16 வரை கைது செய்யக் கூடாது என்று சிபிஐ.,க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் தடை விதித்து, கார்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதை அடுத்து, அவர் முன் ஜாமின் கேட்டு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த ஜாமீன் மனு மீது மதியம் 3 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறியது நீதிமன்றம். பின்னர் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் வரும் ஏப்.16 வரை கைது செய்ய தடை விதித்து, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தது.
முன்னதாக, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கார்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், பல நீதிமன்றங்களில் வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்து, திசைதிருப்புகிறார் என்றும் கூறி, அவரை ஏமாற்றுக்காரர் என்று கூறியிருந்தது. இருப்பினும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி தற்போது கார்த்தி சிதம்பரம் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.