புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி ஏன் விலகியது என்பது குறித்து பாஜக., தலைவர் அமித் ஷா கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.ஆனால் அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ள நாயுடு, அமித் ஷா உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதாகப் பதிலளித்துள்ளார். நாயுடு எடுத்தது தன்னிச்சையான அரசியல் நோக்கத்திலான முடிவு என அமித் ஷா தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமித் ஷா எழுதியுள்ள கடிதத்தில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது எதிர்பாராதது. தன்னிச்சையான முடிவு. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கான அம்சத்தைக் கருத்தில் கொள்ளாமல், அரசியல் லாபத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. அரசியலில் சிறப்பான செயல்பாடு, அனைத்து மாநிலங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பது பாஜக.,வின் நோக்கம்.
தேசிய அளவில் ஆந்திரா வளர்ச்சி பெறுவது எங்களுக்கும் முக்கியமான திட்டம்தான். ஆந்திர மாநில வளர்ச்சிக்கான எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக., தலைமையிலான மத்திய அரசு தவற விட்டதில்லை. இது அனைவருக்கும் தெரியும்.
ஆந்திராவைப் பிரிப்பது குறித்துப் பேசத் துவங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி அவசர கதியில் மாநிலத்தைப் பிரித்தது மட்டுமல்ல, பொறுமையான அணுகுமுறையையும் காட்டவில்லை. கடந்த ஆட்சி இருந்த போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தெலுங்கு தேசத்திற்கு போதிய எம்.பி.,க்கள் இல்லாத நிலையில், தெலுங்கு பேசும் மக்களின் நலன்களை காக்க வேண்டும் என பாஜக., தான் வலியுறுத்தியது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் வளர்ச்சி அடையத் தேவையான நடவடிக்கைகள் நிறைய எடுத்தது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக., எடுத்த நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்கவே முடியாது என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமித் ஷாவின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, அமித் ஷா உண்மைக்கு மாறான கருத்துகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
தவறான தகவல் தருகிறார் அமித்ஷா என்று கூறியுள்ள நாயுடு, பாஜக., வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் ஆந்திர மாநிலம் தொழில் வளர்ச்சி அடையும் என்றும் கூறியுள்ளார் நாயுடு. மேலும், மத்திய நிதியை ஆந்திர மாநில அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று அமித் ஷா கூறுவது தவறு என்றும், தொழில்துறையிலும் வேளாண் உற்பத்தியிலும் ஆந்திர மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.