காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 6 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றம் அளித்த கெடு வியாழக்கிழமையுடன் (மார்ச் 29) முடிவடைகிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்தவொரு முடிவையும் மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்படவில்லை என கர்நாடகா வாதிட்டு வருகிறது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு தயக்கம் காட்டி வருகிறது.
இதனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக கண்காணிப்பு குழுவை அமைக்க பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மேலாண்மை வாரியத்தில் கூடுதலாக சில உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த குழப்பங்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அதிமுக எம்.பிக்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் இன்று அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்தின் ஜீவாதார உரிமை. கடும் வறட்சியால், குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கோரி சிலர் எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர். ஆனால் அதிமுக எம்.பிக்கள் தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக உள்ளோம்’’ எனக் கூறினார்.
இனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த உறுப்பின்ரகளும், மற்ற கட்சி எம்.பிக்களும் அவரை சமாதானம் செய்து அமர வைத்தனர்.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும், ஆனால் இப்படி தற்கொலை என்றெல்லாம் சொல்லி மிரட்டுவது நன்றாக இல்லை என்று அவையில் பலர் கருத்து கூறினர். இருப்பினும் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறியதாக பின்னர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.