காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மெத்தனமாக இருந்து, இன்று கடைசி நாள் வரை கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்த மத்திய அரசு மீது, தமிழகத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்குதல்களும் வசைச் சொற்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால், இதே மத்திய அரசு என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது என்ற பின்னணியுடன், மத்திய அரசின் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர் சிலர். அந்த கருத்துகளில் சில…
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இப்போது “ஸ்கீம்” என்று தீர்ப்பில் இருந்த ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி மாய்மாலம் செய்கிறது மத்திய அரசு. அதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்குப் போகிறது.
“ஸ்கீம்” என்பதற்கும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது… என்று தமிழக ஊடகங்களில் கருத்ஹ்துகள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால், அவ்வாறு ஸ்கீம் என்பதுதான் மேலாண்மை வாரியம் என்றால்,உச்ச நீதிமன்றம் ஏன் அதனைத் தன் தீர்ப்பில் தெளிவாகச் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும், அதை வைத்து தானே கர்நாடக அரசும் கேள்வியை எழுப்புகிறது என்கிறார்கள்.
அதை ஊடகங்கள் குறிப்பிடாமல், ஏதோ மத்திய அரசு குழப்பம் செய்வது போல கருத்துச் சொல்வதில் என்ன நடுநிலை இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்!
அடுத்து இத்தகைய செயல்திட்டத்தை இறுதி செய்வதில் மத்திய அரசிற்கு தன்னிச்சையான அதிகாரம் கிடையாது என்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (பக்கம் 463 பத்தி xix) தெளிவாக்கிவிட்ட பிறகு மத்திய அரசின் துறைகள் ஏன் குழப்புகின்றன? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் ஊடகங்கள் சொல்லவரும் கருத்து என்ன? மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதைத் தானே?
இப்படியாக, மத்திய அரசின் குழப்ப நிலையை முன்வைத்து மத்திய அரசின் செயலை நியாயப் படுத்தி முன் வைக்கப்படும் இன்னொரு கருத்து:
உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது என்று தமிழ் ஊடகங்கள் ஒரு செய்தியைப் பரப்பியுள்ளன.
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி பகிர்வுக்கு ஒரு திட்டத்தை (Scheme) ஆறு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டுமென்றுதான் இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்று இல்லை. அது நடுவர் மன்றத் தீர்ப்பில் இருக்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை விட உச்ச நீதிமன்றத் தீர்ப்பே கணக்கில் கொள்ளப்படும்.
உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் சொன்ன நீர் அளவுகளை மாற்றியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது மேலாண்மை வாரியம் விஷயத்தை மட்டும் எப்படி அப்படியே நடுவர் மன்றம் சொன்ன மாதிரி செய்ய முடியும்?
ஆறு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து ஆதரவு திரட்டி (குறிப்பாக மாநிலங்களவையில்) வாரியம் அமைப்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி. ஆகவே நர்மதா வாரியம் போல பகிர்வுக்கான நடுநிலை அமைப்பு உருவாக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்குள் தமிழகத்துக்கு துரோகம் என்றெல்லாம் பேச இதில் ஒன்றுமில்லை.
மேலாண்மை வாரியம் என்றால் கர்நாடகா அணைகளின் மீதான உரிமையை விட்டு விட வேண்டியிருக்கும். அதை அவர்கள் எதிர்ப்பதால் மேற்பார்வை வாரியம் அமைக்கலாம் என்கிறார்கள். அதே அதிகாரங்களோடு வேறு பெயரில் அமைப்பதில் என்ன தவறு?
Scheme என்பதற்கு என்ன அர்த்தம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போகிறதாம். நீதிமன்ற நடவடிக்கைகளில் இதெல்லாம் வழக்கமானதுதான். ஊடகங்கள் தீர்ப்புகளைத் தங்கள் இஷ்டத்துக்கு புரிந்து கொண்டு பரப்புவதால் இது போன்ற குழப்பங்கள் நிகழ்கின்றன. நம் பக்கத்தை மட்டும் பார்த்தே எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.
இந்த விளக்கம் கேட்பதற்கு இவ்வளவு காலமா என்று நண்பர்கள் ஒரு கேள்வி எழுப்புகிறார்கள்.
மார்ச் ஒன்பதாம் தேதி மத்திய அரசு நான்கு மாநிலங்களை அழைத்து கூட்டம் நடத்தியது. அதில் பேசப்பட்ட விஷயங்களைத்தான் சொல்லியுள்ளேன். அந்தக் கூட்டத்தில் Scheme என்றால் என்ன என்று கர்நாடகம் கேள்வி எழுப்பியது. இது போன்ற கூட்டங்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல் நடத்த முடியாது. இவை டீக்கடை சந்திப்புகள் அல்ல.
இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மத்தியஸ்தம் செய்யும் அதிகாரம் மட்டுமே இருக்கிறது. நீர் ஆதாரங்கள் என்பது இன்னும் மாநில அரசுகளின் கட்டுப்பட்டில்தான் இருக்கிறது. ஆகவே கர்நாடக அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏதோ ஒரு விதத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்!
– சொல்லப் போனால், மத்திய அரசு, கர்நாடக அரசு கேட்பதைப் போல், ஸ்கீம் என்பதன் தெளிவாக்கத்தை முன்னமேயே உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு மூலம் கோரியிருக்கலாம். கடைசிக் கட்டம் வரைக்கும் இழுத்து வந்து, இப்போது கையைப் பிசைந்து கொண்டு நின்றபடி, உச்ச நீதிமன்றத்திடமே விளக்கம் கேட்கலாம் என்று எண்ணுவது, தமிழகத்தின் பார்வையில் பார்க்கப் போனால், ஏமாற்றும் செயலாகவே தோன்றும்!