காவிரி விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அடுத்த கட்ட மோதல் இன்று வெடித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வகை செய்யும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு, குறிப்பிட்ட காலக் கெடுவையும் மீறி, கால தாமதம் செய்தது.
இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, மாநில அரசு ஏதாவது ஒரு வகையில் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, உண்ணாவிரதப் போராட்டம், ராஜினாமா மிரட்டல் என அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளைக் காட்டி வந்த மாநில அரசு, இப்போது சட்ட ரீதியான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
இதை அடுத்து, மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது மாநில அரசு.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி, காவிரி தீர்ப்பை அமல்படுத்த மேலும் 3 மாத காலத்துக்கு அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான 16.2.2018இல் இருந்து 3 மாத காலத்துக்கு இந்த அவகாசத்தைக் கோரி மனுதாக்கல் செய்தது மத்திய அரசு. முன்னதாக, 16.2.2014 தீர்ப்பு நாளில் இருந்து 6 வார கால அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்.
இதனிடையே, கர்நாடகத் தேர்தல் வந்துள்ளதாலும், மாநில அரசின் அரசியல் நடவடிக்கைகள் காவிரியை வைத்து அமைந்துள்ளதாலும், மேலும் அவகாசம் அளிக்க மத்திய அரசு விரும்பியதாகவும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற சொல், மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்று கர்நாடக அரசின் சார்பில் வலுவாகத் தெரிவித்ததாலும், இதனைக் குறித்து விளக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடமே தங்கள் தீர்ப்பில் தெளிவு படுத்தக் கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
இவ்வகையில், தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரியுள்ள மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் அளிக்குமாறும் கேட்டுள்ளது.
மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததைத் தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? – என்று கேள்வி எழுப்பியுள்ளது மத்திய அரசு.
#CauveryManagementBoard #CauveryIssues #KarnatakaElection #CauveryIssue #SupremeCourt