புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின? இதில் ஏதோ சதி நடப்பது போல் தோன்றுகிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.
ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌஹான், “உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கைக்கு முன் ரூ.15 லட்சம் கோடி பணம் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. ஏடிஎம்.,கள் பல பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன.
பணம் புழக்கத்தில் இல்லாததால் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே போயின. பணத்தை பதுக்குபவர்கள் யார்? அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத் தட்டுப்பாட்டை போக்க முயற்சி செய்வேன்” என்று பேசினார்.
இதனிடையே, ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பாததால் வங்கிகளில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கிகளின் வாராக் கடன் ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில் 88 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றவை. அந்தக் கடனை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இந்தியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைஆபத்துக்கு அழைத்துச் செல்வதுபோல் உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வாராக் கடன் குறித்து கடந்த 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ரிசர்வ் வங்கி போதுமான அளவுக்கு, ரூ 2ஆயிரம் நோட்டுகளை விநியோகிக்கவில்லை. இதனால் வங்கிகளுக்கு பண விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்துள்ள ரூ.2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பலர் வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர். இப்படி பணத்தைப் பதுக்குவதால், மேலும் தட்டுப்பாடு நிலவுகிறது. வாடிக்கையாளர்கள் இவ்வாறு பணத்தைப் பதுக்குவது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது” என்று கூறினார்.
முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.