லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடியான நேரத்தில், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அரசு டாக்டரை நோயாளியின் உறவினர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் நோயாளி ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சை அழைத்தனர். மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வர தாமதமாகிவிட்டது.
இது தொடர்பாக அரசு டாக்டரிடம் நோயாளியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் மருத்துவமனை விதிமுறைகள் குறித்துகூறினார். இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் டாக்டரை சரமாரியாக தாக்கினார்கள். காலால் எட்டி உதைத்தனர். உடனே மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்து டாக்டரை மீட்டனர். படுகாயம் அடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதனிடையே டாக்டர் தாக்கப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்த ஒருவர் அதை டாக்டரின் ‘வாட்ஸ் அப்’புக்கு அனுப்பினார். டாக்டர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.