நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `இந்த விவகாரத்தில் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்’ என கொதித்திருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, சொராபுதீன் ஷேக் என்பவரை என்கவுண்டர் செய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி லோயா, தமது நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அமித் ஷாவின் வழக்கை விசாரித்து வரும் நிலையில் நீதிபதி மரணம் அடைந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி, காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. `நீதிபதி மரணத்தில் நீதி விசாரணை தேவை’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தும் முறையிட்டார் ராகுல்.
இந்நிலையில், லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், `நீதிபதி லோயா வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம், காங்கிரஸின் நிலை மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, மக்களிடம் எதிர்மறை உணர்ச்சிகளை வளர்க்கும் விதமாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்றார் உணர்ச்சிகரமாக!
அண்மைய குஜராத் தேர்தலில், அமித் ஷா மீதான இந்த வழக்கையும் முன்வைத்து காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் செய்தது.