இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவன் நான், எனக்கு பாஸ்போர்ட் கிடைக்க உதவுங்கள் என டிவிட்டரில் சுஷ்மா பெயரை டேக் செய்து உதவி கேட்ட வெளிநாடு வாழ் காஷ்மீர் மாநில மாணவருக்கு, ‘அப்படி ஓர் இடம் எங்குமே இல்லையே! நீங்கள் காஷ்மீர் மாநிலத்தவர் என்று குறிப்பிட்டு உதவிகேட்டால், செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்தார். அவரது பதிலடிக்கு, இணையத்தில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தெரிவித்தால், அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்படி நிறையப் பேர் பலனடைந்துள்ளதால், சுஷ்மா ஸ்வராஜின் டிவிட்டருக்கு மதிப்பும் மவுசும் மிக அதிகம்!
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தங்கி மருத்துவம் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் சேயிக் அதீக், சுஷ்மாவுக்கு அனுப்பிய டிவிட்டர் கோரிக்கையில்…
இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவன் நான். பிலிப்பைன்சின் மணிலா நகரில் மருத்துவம் படித்து வருகிறேன். என் பாஸ்போர்ட் சேதம் அடைந்துவிட்டது. புதிய பாஸ்போர்ட்டிற்காக ஒரு மாதம் முன் விண்ணப்பித்தேன். மருத்துவ பரிசோதனைக்காக உடனடியாக வீடு திரும்ப வேண்டும். எனக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்க உதவி செய்யுங்கள் – என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பிய பதிலில், ‘இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற இடம் எங்குமே இல்லை. நீங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு உதவி கேட்டால், நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வேன்’ எனக் கூறியிருந்தார்.
இதை அடுத்து சேயிக் அதீக் தனது டிவிட்டர் பதிவில் மீண்டும் அனுப்பிய கோரிக்கையில், தன்னை ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவன் என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், சேயிக் அதீக்குக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மணிலாவில் உள்ள இந்திய துாதரகத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டார்.
சுஷ்மா ஸ்வராஜ் அளித்த இந்த பதிலடி பதிவு, டிவிட்டரில் மட்டுமல்ல, பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுஷ்மாவின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிகச் சரியான வகையில் திருத்தியிருக்கிறீர்கள் என்று கூறி பாராட்டுதல்கள் குவிந்து வருகின்றன.
அதே நேரம், இந்த மாணவர் என்ன காரணத்தாலோ தனது கோரிக்கை டிவிட்டர் பதிவினை நீக்கியுள்ளார். ஏன் அதனை டெலிட் செய்தார் என்பது அவருக்கே உள்ள நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், அந்த மாணவரின் கோரிக்கைக்கும் சுஷ்மாவின் பதிலுக்கும் சுஷ்மாவின் அதே டிவிட்டர் பதிவில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
அந்தக் கருத்துகளில் சில….
வேலை முடிவதற்காக ஜம்மு காஷ்மீர் என்று போட்டுக் கொள்வான். உதவி பெற்றதும் மீண்டும் அந்த இடத்தின் பெயரை மாற்றிக் கொள்வான்…
அது எப்படி இருந்தால் என்ன..? அது நம் இந்திய பாஸ்போர்ட்தானே..! அவனுக்கு உதவுங்கள்.
இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதை விரும்பாதவர்கள், இந்திய உதவிகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்!
இந்த முட்கள் நம் உதவியை எதிர்பார்க்கும், பின் நம் முதுகிலே குத்தும்!
இதே டாக்டர் பின்னாளில் பயங்கரவாதியாக மாறி நம் ராணுவ வீரர்களைக் கொல்லப் போகிறான்
உங்களை எல்லாம் பார்த்தால் கேவலமாக இருக்கிறது
இன்னும் காந்தி காலத்திலேயே இவர்கள் வாழ்கிறார்கள்..
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதைப் பயன்படுத்தி இந்தியர்களைக் கொல்வார்கள். ஆனாலும் நாம் அவர்கள் தாங்கள் செய்யும் தவறுகள் குறித்து புரிந்துகொள்ளக் கூட வாய்ப்பு தராமல் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவோம். மனித நேயம் என்பது நமக்கு மட்டுமே போதிக்கப் படுகிறது, அவர்களுக்கு அல்ல. இத்தகையவர்களுக்கு உதவும் முன்னர், நாம் இவர்களால் கொல்லப் பட்ட ராணுவவீரர்களின் குடும்பத்தாரிடம் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்!
அந்த டிவிட்டையே டெலிட் செய்துள்ளாரே! இதில் இருந்தே தெரியவில்லையா? அவர் எதை நோக்கி இருக்கிறார் என்று!?
உங்கள் உதவியை அவர் எதிர்பார்த்தார். கிடைத்ததும் மீண்டும் ப்ரொஃபைலை மாற்றிக் கொள்ளப் போகிறார். இத்தகைய நன்றிகெட்டவர்களுக்கு உதவும் முன்னர் நன்றாக யோசியுங்கள்.
காஷ்மீருக்கு திரும்பி வந்த பின்னர் சுற்றுலா பயணிகள் மீதும் ராணுவத்தினர் மீதும் கல்லெறியப் போகிறான்… அவ்வளவுதானே!
இப்படி கூறியதன் மூலம் ஜம்மு காஷ்மீர், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் அப்படித்தானே!
இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்கள்.. சரி! பின் ஏன் பிபிசி ஆங்கிலம், ஹிந்தி செய்தி தளங்களில் ‘இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீரில்’ என்று குறிப்பிடுகிறார்கள்?! அதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
இந்திய அடையாளங்களுடன் வெளிநாட்டுக்குச் சென்றவர், இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளார் என்றால், அவர் தாம் இந்தியர் என்று குறிப்பிடும் அனைத்து விதமான அடையாளக் கோப்புகள் அட்டைகளையும் இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.