எர்ணாகுளம்: பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டம் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளிக்கு முழுமையாகக் கை கொடுத்துள்ளது.
இலவச வைஃபை வசதியின் மூலம் ரயில்வே கூலித் தொழிலாளியாக வேலை செய்த ஸ்ரீநாத், மாநில தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீநாத். இவர், கேரள மாநில தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை வசதியின் மூலம் படித்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல், தன் கையில் உள்ள மொபைல் போனிலேயே, பழைய வினாத்தாள், கேள்விகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வார். பின்னர் வீட்டுக்குச் என்று, ஓய்வு நேரத்தில் அவற்றை விடாமுயற்சியுடன் படித்துள்ளார். இணைய தளங்களில் போட்டித் தேர்வுக்கான ஆடியோ பாடங்களை பதிவிறக்கி, அவற்றை ஓடவிட்டு, சுமை தூக்கிச்செல்லும் போது கூட அவற்றைக் காதில் கேட்டுக் கொண்டு, மனத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ளார்.
இதை அடுத்து அவர் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்று விட்டார். நேர்முகத் தேர்விலும் ஸ்ரீநாத் தேர்ச்சி பெற்றுவிட்டால், நில அளவைத் துறையில் கள உதவியாளர் பணி அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.
ஸ்ரீநாத், மாநிலப் பணிக்கான இந்தத் தேர்வை மட்டுமல்லாமல், ரயில்வே துறை நடத்தவுள்ள குரூப் டி பணிக்கான தேர்வையும் எழுதவுள்ளார். ரயில் நிலைய இலவச வைஃபை மூலம் படித்து ரயில்வே பணியில் அலுவலராக மாறிவிட்டால், நிச்சயம் அவர் ஒரு சாதனை மனிதர்தான்! ஸ்ரீநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அதே வேளையில், டிஜிட்டல் இந்தியா திட்டம் எந்த அளவுக்கு ஏழை எளியவர்களுக்கும் பயன் தருகிறது என்பதையும் சேர்த்தே பதிவு செய்கின்றனர்.