புது தில்லி: காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இன்று காலை உச்சநீதிமன்ற வழக்குகள் பட்டியலில் அறிவிப்பு இருந்தது.
காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கோரியிருந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அறிவித்த மாற்றங்களுடன் அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதை அடுத்து, வரைவு செயல்திட்ட அறிக்கையை அளிப்பதற்கு முதலில் மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் பின்னர் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மே 3ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், செயல் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இனி கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் மே 14ஆம் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், காவிரி தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று வரை நடைபெறவில்லை. ஆனால், இதற்கு அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதாலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் இந்த வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அவசியமற்றது என்றும் கூறியிருப்பதால், வரைவுத்திட்ட அறிக்கை நேரடியாக இன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காரணத்தாலேயே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாமதம் செய்தது என்று தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலும் நிறைவடைந்து விட்டதால், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இனி கால தாமதம் செய்ய எந்தக் காரணங்களும் இல்லை என்பதால் மத்திய அரசு இதற்கான திட்ட வரைவினை உச்ச நீதிமன்றத்தில் வழங்கும் என்று தெரிகிறது.