புது தில்லி: தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது.
தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச் சாலைகளாக மாற்றாமல், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அவற்றுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடைகள் செயல் படுவதாக வழக்கறிஞர் கே.பாலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சுமார் 1,300 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தொலைவை தனித் தனியாகக் கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை அடுத்து மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.