கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்கள் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. நேரம் ஆக, ஆக., பாரதீய ஜனதா 100 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் வெற்றி பெற்றால் போதுமானது. எனவே இங்கு காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பின்படி யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பது பொய்யாகி போனது.
குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை உள்ளது. காங்கிரஸ் பா.ஜ.,வை விட அதிக தொகுதிகள் பெற்றால் குமாரசாமி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கலாம் என கனவு கண்டது. இதுவும் தகர்ந்து போனது. ஆகையால் தற்போது பாரதீய ஜனதா தனித்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எடியூரப்பா மீண்டும் முதல்வராவார்.
காலை 10.30 மணி முன்னிலை நிலவரங்களின் படி, பாஜக., 118 தொகுதிகளிலும் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் , மஜத., 46 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தனர். எனவே பாஜக., தனிப் பெரும் பான்மையுடன் கூடிய கட்சியாக உருவெடுத்துள்ளதால், அடுத்து பாஜக.,வே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக., முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்கவுள்ளார்.