சென்னை: கர்நாடகத் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள பாஜக., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட செய்தியில், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து இருந்ததால், மாநில காங்கிரஸை விட்டு விட்டு, மத்திய பாஜக., அரசையே தனது இலக்காகக் கொண்டு அரசியல் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். இப்போது, மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் பாஜக., அரசே இருக்கும் என்பதால், ஸ்டாலினின் அரசியல் திட்டமிடல் இனி வேறு பாதையில் செல்லக் கூடும்.
காரணம், மூன்றாம் அணி என்பதை முன்வைத்து மம்தா, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இயங்கி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் ஸ்டாலினும் இனி காங்கிரஸை புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இன்று ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #KaranatakaVerdict
— M.K.Stalin (@mkstalin) May 15, 2018