பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக இன்று காலை எடியூரப்பா பொறுப்பேற்றார். அவருக்கு முக்கியத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற 112 இடங்கள் தேவை. ஆனால் பாஜக., வசம் 104 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றம் தடை இல்லை என்று கூறிய சூழலில், எடியூரப்பா மட்டும் இன்று காலை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 117 இடங்களைப் பெற்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் இரண்டு கட்சிகளும் இணைந்து கோரிக்கை வைத்தன.
தனிப் பெரும் கட்சி என்ற வகையில் தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு பாஜக.,வின் சார்பில் எடியூரப்பா கோரினார். இதை அடுத்து அவர் ஆட்ட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. தொடர்ந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். எடியூரப்பாவுடன் அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே அமைச்சரவை பதவியேற்கும்.
இதற்கிடையில், பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர் முன்னாள் முதல்வர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள்.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.