திருத்தி அமைக்கப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்.
மாநிலங்கள் தெரிவித்த யோசனைகளின்படி திட்ட வரைவை மாற்ற நீதிமன்றம் உத்தரவு அளித்தது. அதன்படி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து உரிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும்.
காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஆணையம் என்ற பெயருடன், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப் பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப் படுகிறது. நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாளை தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு இறுதி வரைவு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.