டில்லியில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார், இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில், பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில், மாநில தலைமைச் செயலர், அன்ஷு பிரகாஷ், ஆம் ஆத்மி கட்சியினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம், டில்லி மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியது.இந்நிலையில், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அவருக்கு, ‘நோட்டீஸ்’ அளித்துள்ளதாக, கூடுதல், டி.சி.பி., ஹரேந்திர சிங் நிருபர்களிடம் கூறினார்.இதுகுறித்து, ஹரேந்திர சிங் கூறுகையில், ‘நாளை, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த உள்ளோம். வீட்டில் அல்லது அலுவலகத்தில் விசாரணை நடத்த வேண்டுமா என்பதை தெரிவிக்கும்படி, அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 11, எம்.எல்.ஏ.,க்களிடம், தலைமைச் செயலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். முதல்வரின் தனிச் செயலர், பிபவ் குமாரிடமும் விசாரணை நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.