கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு, அம்மாநில கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், அகில பாரத ஹிந்து மஹாசபா வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், தேர்தலுக்கு பின் கூட்டணி அமைப்பது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. எனவே, குமாரசாமி முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி, உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு, 12ல் தேர்தல் நடந்தது. அதில், பாரதீய ஜனதா 104, காங்கிரஸ் 78 மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம், 37 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரசும், ம.ஜ.த., கட்சியும் கூட்டணி அமைத்த நிலையில், தனிப்பெருங்கட்சியான, பாரதீய ஜனதா சார்பில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதனை எதிர்த்து, காங்., வழக்கு தொடர்ந்ததையடுத்து, 19ல் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, எடியூரப்பாவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்கும்படி, கவர்னர், வஜுபாய் வாலா அழைத்ததையடுத்து, நாளை, முதல்வராக, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர், குமாரசாமி பதவியேற்கஉள்ளார்.