நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மும்பை காவல்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண். அவர் இப்போது, இந்தக் கொலையில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு உள்ளது என்று கூறி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபையில் தங்கியிருந்த ஓட்டல், தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமானது என்று கூறியுள்ள வேத் பூஷண், சவூதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறியுள்ளார். மேலும், தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வதற்காக, அந்த ஹோட்டலில் தம்முடைய புலனாய்வுக் குழுவுடன் தங்கினாராம். அங்கே ஸ்ரீதேவியின் ரத்த மாதிரிகளையும் அவர் நுரையீரலுக்குள் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்ற விவரத்தையும் கேட்ட போது, அந்தத் தகவல்களை துபை போலீஸார் தர மறுத்துவிட்டனராம். எவ்வளவு கேட்டும், ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மட்டுமே அவர்கள் அளித்ததாக வேத் பூஷண் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் அப்படி ஏன் சந்தேகம் எழுந்தது என்பதற்கான விளக்கமாக வேத் பூஷண் தெரிவித்திருக்கும் செய்தி, காப்பீடு விவகாரத்தில் வந்து நிற்கிறது. நடிகை ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடிக்கு காப்பீடு செய்யப் பட்டிருந்ததாம். இந்தக் காப்பீட்டு நிபந்தனையின் படி ஸ்ரீதேவி துபையில் இறந்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற தகவலை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் வேத் பூஷண் கூறியுள்ளார். எனவேதான் அவரது மரணத்தில் பெரும் சந்தேகம் தமக்கு எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.