பெங்களூர்: விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, நாளை கர்நாடக மாநிலத்தில் பாஜக., சார்பில் ‘பந்த்’ நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பெங்களூர் ஆர்.ஆர்.நகரில் நாளை தேர்தல் நடக்க இருப்பதால், பெங்களூரு தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 28ஆம் தேதி பந்த் உறுதியாக நடக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
‘ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி முதல்வர் குமாரசாமி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில் இம்மாதம் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி விவசாயக் கடனை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். ஆனால், பதவிக்கு வந்ததும் செய்யவில்லை. இப்போது ‘தனிக்கட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால் தள்ளுபடி செய்வேன்’ என சால்ஜாப்பு சொல்கிறார்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். விவசாயிகளே பந்த் நடத்துவர்; இவர்களுக்கு பாஜக, ஆதரவளிக்கும்.
சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் பொறுப்பான எதிர்க்கட்சியாக, பாஜக., செயல்படும். நாளை, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலம் முழுவதும் பந்த் நடத்துவது உறுதி.
மஜத., – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, ஆர்.ஆர்.நகர், ஜெய நகரில் பாஜக, வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார் எடியூரப்பா.