தமிழகத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம். இதற்கு பலரும் கண்டனமும் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 23ஆம் தேதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 போ் கொல்லப்பட்டதற்கு, ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் உட்பட பலரும் கண்டனம் தொிவித்துள்ளனா். ஆனால் பிரதமர் மோடி வெளிப்படையாக ஏன் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை? இந்தக் கேள்வி பலரது மனத்திலும் உள்ளதுதான்?
இது குறித்து செய்தியாளர்களும் தமிழக பாஜக., தலைவர்களிடம் கேட்டுத்தான் வருகின்றனர். இந்தக் கேள்விக்கு இரு தினங்களுக்கு முன்னர் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமது வருத்தத்தை உடனே பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார் என்றும், இது குறித்து விசாரித்தறிய வேண்டும் என்றும் கூறியதாகவும் பதிலளித்தார்.
ஆனால், இப்போது புதிய ஒரு தகவலை அளித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமா் நரேந்திர மோடி வருத்தம் தொிவிக்கவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவர் பதில் கூறியபோது, ஸ்டொ்லைட் போராட்டத்தில் உயிாிழந்தவா்கள் பாமர மக்களா? விடுதலைப் புலிகளா? நக்சலைட்டுகளா என்பது முதலில் தொிய வேண்டும். இது தொடா்பான முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமா் மோடி கருத்து தொிவிக்கவில்லை… என்றார்.
உண்மையில் இதுதான் காரணமா என்பது மோடிக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், மக்கள் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்றுதான் அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சுவாமி கூறியது போல், உயிரிழந்த வர்களில், நக்சல் இயங்கங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதிகம் என்று தெரியவருகிறது.
சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்… என்றார்.
அது போல், நடிகரான ரஜினிகாந்த் இன்றைக்கு இருப்பாா், நாளைக்கு இருப்பாரா என்பது அவருக்கே தொியாது… என்று கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.