திருவாரூர்: காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஆணையம் செயல்பட முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தன் பிரதிநிதிகளை பரிந்துரைக்காமல் உள்ளது. இதனால் ஆணையத்தின் செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளது.
திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி கர்நாடகாவில் இருந்து பிரதிநிதிகளை அனுப்பச் சொல்ல வேண்டும் என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மேலும், சேலம் பசுமை வழி சாலைத்திட்டம் குறித்தும், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் கேட்கப் பட்ட போது, சென்னை- – சேலம் பசுமை சாலைத்திட்டத்தை வேண்டும் என்றே, பல இயக்கங்கள் எதிர்க்கின்றன என்று கூறிய அவர், தமிழக வளர்ச்சிக்கு தடையாக உள்ள இவர்களை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை – சேலம் பசுமை சாலைத்திட்டம் தமிழகத்திக்கு கிடைத்த வரப்பிரசாதம். திமுக., ஆட்சியில் இதுபோன்ற புதிய திட்டங்கள் ஏதும் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. எனவே இந்தத் திட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர் என்று கூறினார்.