இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே இப்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இன்று நடைபெற்ற பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி வென்ற பின்னர் கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அஜிங்க்யா ரஹானே. அவரின் இந்தச் செயல் அங்கிருந்தோரை மட்டுமல்ல, டிவி.,யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் ஆனந்தக் கண்ணீரை வரவைத்தது.
இதற்குக் காரணம் இல்லாமலில்லை. அண்மையில்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. அதன் பின்னர், தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடியது.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 2 நாள்களில் முடிந்து போனது ஒரு புறம் இருந்தாலும், ஆப்கன் அணி வீரர்களுக்கு இது மிகப் பெரும் கௌரவமாகவே இருந்தது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 474 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியது. இதில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆப்கன் அணி தாம் விளையாடிய முதல் போட்டியில் இரு இன்னிங்க்ஸிலும் 100 ரன்களுக்கு மேல் கடந்தது என்றாலும், அணி வீரர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. போட்டியில் இன்னும் இரு நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடி இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். இருப்பினும் விளையாட்டில் எதுவும் சொல்ல இயலாதுதான்!
இந்தப் போட்டிக்குப் பின்னர் வெற்றிக் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமர்ந்தனர் இந்திய வீரர்கள். அப்போது அஜிங்க்யா ரஹானே செய்த செயல், அனைவரையும் நெகிழச் செய்தது. தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.
Ajinkya Rahane Called Afghanistan Team To Join The Celebrations.👍
What A Lovely Gesture.👏👌🇮🇳
Next Target Is England 🔫😎💪#INDvsAFG Umesh Yadav #HistoricTest pic.twitter.com/Qva9ZQadgI— Virat Kohli (@ViratKohli18A) June 15, 2018