உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில்பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. நந்தகிஷோர் குஜ்ஜார் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காசியாபாத் மாவட்டத்துக்குட்பட்ட லோனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நந்த கிஷோர் குஜ்ஜார். நேற்று இரவு இவர் காசியாபாத் நகரில் உள்ள ஃபரூக் நகர் பகுதியில் உள்ள ஹிண்டன் பாலம் அருகில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எம்.எல்.ஏ. குஜ்ஜாரின் தனி பாதுகாவலர்கள் மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து அவர்கள் தப்பியோடினர். இந்த தாக்குதலில் நந்தகிஷோர் குஜ்ஜார் காயமின்றித் தப்பினார்.