இன்று ம.பொ.சி. பிறந்த நாள்: முதல்வர் பங்கேற்பு

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 113-ஆவது பிறந்த நாள் விழா இன்று நடைபெறவுள்ளது. இதில், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதுகுறித்து புதுச்சேரியில் புதுவை மாநில சான்றோர் குல தரும பரிபாலன கிராமணியார் நாடார் பேரவையின் மாநிலத் தலைவர் புரந்தரதாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை தமிழக தலைநகராக ஆக்கப்பட வேண்டும், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து போராடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 113-ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 26-ஆம் தேதி பாக்கமுடையான்பட்டு சாலை கொக்கு பூங்கா அருகில் நடைபெற உள்ளது.

அப்போது அங்குள்ள ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் வெ. வைத்திலிங்கம், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இதுபோல, இந்த விழாவை அனைத்துத் தொகுதிகளிலும் நடத்த உள்ளோம்.

ம.பொ.சிவஞானத்துக்கு புதுவை அரசு சார்பில் சிலை அமைத்து, பிறந்த நாள், நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். காமராஜர் மணிமண்டபத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். சி.பா. ஆதித்தனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்றார் அவர்.