​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத்தின் ஷூ கயிற்றை, அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன.

மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநருமான ஊர்மிளா சிங்கின் நினைவஞ்சலி நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் சியோனி பகுதியில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமல் நாத்தின் ஷூ லேஸ்களை, கட்சியின் எம்.எல்.ஏ ரஜ்னீஷ் சிங் கட்டிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பின்னர் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த வீடியோ காட்சிகள் நம் புருவங்களை உயர்த்திய போதிலும், கட்சியின் தலைவர் மீதான மரியாதையை வெளிப்படுத்த இது ஒரு வழி என்று அந்த எம்.எல்.ஏ கூறியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறும்போது,

தலைவர் கமல்நாத் என் தந்தையை போன்றவர், அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன், என் பள்ளி நாட்கள் முதல் அவரின் கால்களை தொட்டு வணங்கி அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதை பின்பற்றிவருகிறேன். என்னுடைய குடும்பத்திற்கும், என் தந்தைக்கும் அவர் மிகவும் நெருக்கமானவர் என்று எம்.எல்.ஏ ரஜ்னீஷ் சிங் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் எந்தவொரு சர்ச்சையும் ஏற்படுத்தக்கூடாது, ஏனென்றால் கமல்நாத்ஜி ஊர்மிளா சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய போது பலரும் உடன் இருந்தனர், கூட்டத்தில் அவர் தனது காலணிகளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது, அதை நான் கவனித்துவிட்டேன். அதை நான் அவருக்கு அதைத் தேடிப் பொருத்தி சற்று உதவினேன் அவ்வளவுதான். இதில் என்ன தவறு இருக்கிறது. ஊடகங்கள்தான் இச்சம்பவத்தை பெரிது படுத்துகிறார்கள்.” இவ்வாறு எம்எல்ஏ ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார்.