கனமழை காரணமாக மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இரு மெட்ரோ நகரங்களிலும் உள்ள முக்கியச் சாலைகளும், ரயில்வே வழித்தடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய வர்த்தக நகரான மும்பை, வழக்கம் போல் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பாந்த்ரா, அந்தேரி, சயான், செம்பூர் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும், கார்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கனமழையால், ரயில் தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் மண் அரிப்பும் ஏற்பட்டதால், வெளியூர் மற்றும் புறநகர் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. கன மழைக்கு ஒரே நாளில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்குப் பருவ மழையின் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் பரவலாக கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இடி மின்னல் தாக்கி 5 பேரும், நீரில் மூழ்கி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோல்கத்தாவில் மகாத்மா காந்தி சாலை, சையத் அமீர் அலி அவென்யூ உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. நகரின் உள் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள ரயில்வே வழித் தடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.