காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இம் முடிவு ஒரு தலைபட்சமானது என்று விமர்சித்த கர்நாடக அரசு, ஆணையம் மற்றும் குழுவுக்கு கால தாமதமாக கர்நாடக அரசின் பிரதிநிதிகளை பரிந்துரைத்தது.

ஆணையத்தின் விதிமுறைகள் அறிவியலுக்கு எதிரானதாக அமைந்துள்ளதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட சட்டப் போராட்டம் குறித்து விவாதிக்க பெங்களூரு விதான செளதாவில் இன்று காலை 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்திருந்தார்.