டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 20 முதல் மீண்டும் லாரி ஸ்ட்ரைக்

டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடி மற்றும் இன்சூரன்சு கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த இந்தியா முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவான தென்மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தென்மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் இந்த வேலைநிறுத்தம் குறித்துக் கூறியபோது, அரசுக்கு சுங்கச் சாவடிகளால் ரூ. 80 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனவேதான் நாங்கள் சுங்கச் சாவடிகளை முற்றிலும் அகற்றிவிட்டு, மொத்தமாக சுங்க வரி வசூலிக்கக் கோருகிறோம். லாரிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நாடு முழுவதும் இயங்கும் 68 லட்சம் லாரிகளுக்கு சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்துவதாகக் கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்காமல் இருக்கிறது.

ஏற்கனவே மூன்று முறை நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் போதும் மத்திய அரசு பெரிதும் கண்டு கொள்ளவில்லை. எனவே, வரும் ஜூலை 20- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளோம். இதனால் அரசுக்கு தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். தமிழகத்துக்கு மட்டும் ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்.. என்று கூறினார்.