தில்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்! முரண்டு பிடிக்கும் குமாரசாமி!

காவிரி விவகாரத்தில் பிரச்னையை நீட்டித்துக் கொண்டே போவதுதான் தங்கள் அரசியல் இருப்புக்கான ஒரே வழி என குமாரசாமி யோசித்து செயலாற்றி வருகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தில்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக, கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகக் கூறி போராட்டங்களை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவது என்று கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் திங்கள் கிழமை நாளை நடைபெறும் நிலையில், இது குறித்து ஆலோசிப்பதற்காக குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பெங்களூரு விதான் சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்ப்பது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டு மேல் முறையீடு செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை இருப்பதால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே கர்நாடக எம்.பிக்கள் குரல் எழுப்பவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை வலியுறுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு திட்டத்தை ஏற்க முடியாது என முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் இதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரச்னையை நீட்டித்துக் கொண்டே போவதுதான் தங்கள் அரசியல் இருப்புக்கான ஒரே வழி என குமாரசாமி யோசித்து செயலாற்றி வருகிறார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.