மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு மேலே செல்லும் மேம்பாலத்தில் திடீரென நடைபாதைப் பகுதி இடிந்து சரிந்தது. இதில், பாலத்தின் கீழ் செல்லும் ரயில் பாதையில் உள்ள மின் கம்பிகளும் சரிந்து ரயில் பாதையிலேயே விழுந்தன. காலை 7.30க்கு ரயில்வே நிலைய நடைமேடை 7-8க்கு இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.
எஸ்.வி. சாலையில் உள்ள கோகலே பாலம், அந்தேரி கிழக்கு மற்றும் அந்தேரி மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் மிக முக்கியமான பாலம். தகவல் அறிந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உடனடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் என்றாலும், மழைக்காலத்தில் மும்பையில் தொடரும் இது போன்ற விபத்துகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது தவறு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த வருடம் நிகழ்ந்த குறுகிய நடைப் பால விபத்தைப் போல் இந்த ஆண்டு நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், இதைத் தொடர்ந்து ரயில்வே பாதைக்கு மேல் செல்லும் மேம்பாலங்கள், மற்றும் மும்பை மேம்பாலங்கள் திறன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
Restoration work is being carried out on war footing to clear the tracks near Andheri where a part of ROB fell down on tracks this morning #WRUpdates @drmbct pic.twitter.com/p8GMEMGaoQ
— Western Railway (@WesternRly) July 3, 2018
இதனிடையே, ரயி்ல் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்று பாராட்டிய மத்திய அமைச்சர், அவருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார்.
இந்தப் பாலம் இடிந்து விழுவதை, தொலைவிலேயே கவனித்தார் அந்த டிரைவர். உடனடியாக செயல்பட்ட அவர், அவசரகால பிரேக்கை போட்டு, ரயிலை நிறுத்தினார். இதனால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பித்தனர். மேலும், உயர் மின்னழுத்த கம்பிகள் ரயில் பாதையிலேயே அறுந்து விழுந்தது. இது மட்டும் ரயில் மீது விழுந்திருந்தால், மின்சாரம் பாய்ந்து பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, சமயோசிதமாக செயல்பட்டுரயிலை நிறுத்திய ரயில் டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் மும்பை அந்தேரி ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தின் நடைப்பாலப் பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, ஈரம் காரணமாக நடை மேம்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகள் வலுவிழந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.