சந்தனப் பொட்டு வெச்சி நடிச்சது தப்பாய்யா? பொண்ண மதரசாவுல இருந்து நீக்கிட்டாங்க..! இஸ்லாமியரின் குமுறல்!

கேரள மாநிலத்தில், மாநில பாரம்பரிய பண்பாட்டு வழக்கப் படி, சந்தனப் பொட்டு வைத்து ஒரு குறும்படத்தில் நடித்த காரணத்துக்காக, மாணவி ஒருவரை மதரஸா பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை பதிவு செய்த முகநூல் பதிவு, வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்தவர் உம்மர் மலயில். இவரது மகள் ஹீனா. மதரஸா ஒன்றில் பயிலும் மாணவியான இவர் குறும்படம் ஒன்றில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துள்ளார். இந்தப் படத்தைக் கண்ட மதரஸா, உடனடியாக அந்தப் பெண்ணை மதரஸாவில் இருந்து வெளியேற்றியுள்ளது. இது தொடர்பாக தந்தை உம்மர் மலயில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அந்தப் பதிவில், நியாயம் கேட்டு அவர் கூறியுள்ளதற்கு பலரும் கருத்துப் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

உம்மர் மலையில் தனது பதிவில், என் மகள் எப்போதுமே பள்ளி மற்றும் மதரஸாவில் முதல் இடத்தைப் பெறுவாள். கல்வி அறிவுடன் பாடல், நடிப்பு என அனைத்திலும் சிறப்பிடம் பெறுபவள். மாவட்ட அளவிலான போட்டிகள் பலவற்றில் பங்கெடுத்தவள். தன் திறமைகளை கச்சிதமாக வெளிப்படுத்தி பரிசுகளைப் பெறுபவள். மதரஸா சார்பில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் 5-ஆவது இடம் வந்து சாதனை படைத்தாள். எனினும் அவள் தற்போது மதரஸாவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இதுதான்.அவள் குறும்படம் ஒன்றில் நடித்தாள். அதற்காக நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்திருந்தாள். இதனால் அவளை மதரஸாவில் இருந்து நீக்கியுள்ளனர். நல்லவேளை.. கல்லெறிந்து கொல்லப்படும் அளவிற்கு என் மகளுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

அவர் தனது முகநூல் பதிவில் ஹீனா நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்திருக்கும் படத்தையும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். மேலும், ஹீனா பள்ளியில் பாடிய பாடல்கள், பரிசு பெற்ற காட்சிகள் வீடியோக்களையும் தனது முகநூல் பதிவில் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.


அவரது பதிவு அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மதரஸாவிற்கு எதிராக துணிந்து நின்றதாக பலரும் உம்மருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆயினும் சிலர், இது இஸ்லாத்தை கெடுக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளனர்.

இதனிடையே உம்மர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இஸ்லாமை தான் தொடர்ந்து நம்புவதாகவும், அதனையே பின் தொடர்வதாகவும் உறுதிபடக் கூறியுள்ளார். அந்தப் பதிவில், இது ஒரு உலகப் பிரச்னை அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளை பயன்படுத்தி மதத்தை களங்கப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இது ஒரு தனிப்பட்ட பிரச்னை. நீங்கள் சொல்வதுபோல், என் மதத்திற்கு நான் எதிரானவன் இல்லை. நான் அதனை 100 சதவீதம் இன்னும் நம்புகிறேன். அதற்கு ஆதரவும் மரியாதையும் தருவேன். நான் மனிதனை நேசிக்கிறேன். என்னை துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்களே..? முதலில் பிரச்னை என்ன..? உண்மை என்ன? என தெரிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா..? அது தொடர்பாக ஒரு மெசேஜ் மூலமாக கூட என்னிடம் பேசினீர்களா..? அதன் பின் என்னை வைத்து ட்ரோல் செய்து வீடியோ போடலாம்” எனக் கூறியுள்ளார்.

அவரது முகநூல் பக்கம் இப்போது பிரபலமாகிவிட்டது. கேரளத்தில் ஆயிரக்கணக்கானோர் இப்போது அந்தச் சிறுமியின் பாடல்களை, படங்களை முகநூலில் பகிர்ந்து வருகின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.