திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார். அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை அடுத்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அதே கிறிஸ்துவ சர்ச்சை சேர்ந்த இன்னொரு பாதிரியார் பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப் பட்டுள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்பப் பிரச்னை குறித்துக் கூறி, அதை சுமுகமாகத் தீர்த்து வைக்கும்படி கேட்டுள்ளார்.
அந்நிலையில், அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அப்பெண்ணை அங்குள்ள சர்ச்சுக்கு வரவழைத்து குடும்பப் பிரச்னையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாகக் கூறி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் பிஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் அந்தப் பெண் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவது, கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல புகார்கள் சர்ச் மட்டத்தில் அமுக்கப்படுவதும், பிஷப்களே கட்டப் பஞ்சாயத்து செய்து, பல புகார்களை வெளிவராமல் தடுத்து சமரசம் செய்து வைப்பதும் நடப்பதாகக் கூறப்படுகிறது.