நாடாளுமன்றத்துக்கு உரிய காலத்திலேயே தேர்தல் நடைபெறும் என்றும் முன்கூட்டியே வராது என்றும் கூறினார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கும் என அமித்ஷா கூறியதாக வெளியான தகவலுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பாஜக.,வை வலுப்படுத்துவது குறித்து ஹைதராபாத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் உரிய காலகட்டத்திலேயே நடைபெறும்; முன்கூட்டியே நடத்தப்படாது என்பதை அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அமித்ஷா கூறியதாக, பாஜக நிர்வாகி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பாஜக தலைவர் அமித்ஷா ராமர்கோவில் கட்டும் பணி தொடங்குவது பற்றி பேசுவதாக சர்ச்சை எழுந்தது.
ஆனால், பாஜக தலைவர் அமித் ஷா ராமர் கோவில் பிரச்னை தொடர்பாக நேற்று தெலங்கானாவில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பாஜக ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, அமித் ஷா ஹைதராபாத்தில் ராமோஜி ராவ், சாய்னா நேவால் உள்ளிட்ட பிரபலங்களைச் சந்தித்து, நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறித்து விளக்கும் கையேடுகளை அளித்தார்.