கர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான்! முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே குமாரசாமி எந்தக் கருத்தை, எந்தக் காட்சியை நிலை நிறுத்த ஆசைப் பட்டு நடந்து கொள்கிறாரோ அதையே இப்போதும் தொடர்ந்து செய்கிறார்.
தனக்கு பதவியில் ஆசை இல்லை என்றும், தாம் கட்டாயத்தின் பேரில் பதவியில் அமர்த்தப் பட்டிருப்பதாகவும் ஒரு கருத்தை வலியத் திணிக்க முயற்சி செய்கிறார். தான் முதல்வர் என்றாலும், எல்லாமுமே காங்கிரஸ் கையில் இருக்கிறது என்று மக்களிடம் பரப்பினார். தன்னால் ஆவது எதுவும் இல்லை என்றும், தாம் வெறும் பொம்மைதான் என்றும் நிலை நிறுத்த, மக்களிடம் அனுதாபம் தேட எத்தகைய அரசியல் அரிதாரத்தைப் பூசிக் கொண்டிருக்கிறார் என்பதை கிண்டலடிக்காதவர்கள் கிடையாது.
ஜூலை 14 அன்று ஒரு பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் கூட்டத்தில் பேசிய குமாரசாமி, கூட்டணி என்ற பெயரில் தான் விஷத்தைக் குடித்து விட்டதாகவும், பல விஷயங்களில் தான் நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். தான் ஏன் விஷத்தைக் குடித்ததாக அவர் சொல்ல வேண்டும் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது?! அப்படி என்றால் விஷமுறிவுக்காக உடனே கூட்டணியை விட்டுவெளியே வந்துவிடுவாரா அல்லது பதவியை விட்டு விலகுவார்ரா என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது.
வெறும் 37 இடங்களைக் கையில் கொண்டிருந்த குமாரசாமிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் நாம் சேர்கிறோம், காங்கிரஸார் தம்மை எல்லாவிதத்திலும் நிர்பந்திப்பார்கள் என்பது தெரியாமலா இருந்தது?
இப்போது காங்கிரஸாரைக் கை காட்டிவிட்டு, எல்லா விதமான முறைகேடுகளையும் குமாரசாமி செய்யமாட்டார் என்பதற்கு எந்த உறுதிப் பத்திரமும் யாரும் தர இயலாது. காரணம், எல்லாவற்றுக்கும் காங்கிரஸை பொறுப்பாக்குவதற்கு குமாரசாமி அடித்தளம் இட்டுவிட்டார். அதே போல், ஒரு முதல்வர் இப்படி கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு, காங்கிரஸும் எல்லா விதங்களிலும் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது வெளிப்படையாக உறுதியாகிவிட்டது. இப்படிப்பட்ட ஆட்சி கர்நாடகாவில் தொடரத்தான் வேண்டுமா என்பதை மக்களாகிய நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!
கூட்டணி என்றா விஷம் அருந்திய குமாரசாமிக்கு காங்கிரஸ் சார்பில் சமாதானம் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸுக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் குமாரசாமிக்கு ஆறுதல் கூறுகிறார். மதசார்பற்ற பலரும் குமாரசாமிக்கு ஆதரவு கொடுக்கின்றனராம். இந்த மத சார்பற்ற தன்மையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, குமாரசாமி வலம் வர வேண்டுமாம். அந்த ஒன்றுக்காகவே காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துள்ளதாம். மதசார்புள்ள கட்சிகளின் ஆதரவாளர்கள் பேசுவதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் இருந்தாலே போதும், நீங்கள் சரியாகிவிடுவீர்கள் என்று கூறியிருக்கிறார் கார்கே!
இன்னும் எத்தனை காலத்துக்கு மதசார்பற்ற என்ற பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டு காங்கிரஸார் கொள்ளை அடிப்பார்கள் என்பது காங்கிரஸாருக்கே வெளிச்சம்!
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுதாகர் கூறியபோது, குமாரசாமி சொல்வது போன்று, காங்கிரஸ் விஷத்தை அல்ல, அமிர்தத்தையே அவருக்குக் கொடுத்துள்ளது. வெறும் 27 இடங்களில் வென்றவருக்கு முதல்வர் பதவியையே கொடுத்துள்ளது காங்கிரஸ். எனவே குமாரசாமி தைரியமாக பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். குமாரசாமி கண்ணீர் விடுவதற்கு பதிலாக, சாமானிய மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க முயற்சி செய்ய வேண்டும்.. என்று கூறியுள்ளார்.
இப்படியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைப் போல் ஓர் அழுகுனி ஆட்டத்தை ஆடி வருகிறார் குமாரசாமி. இப்படி ஓர் ஆட்டத்தை ஆடுவதற்கான அரிய யோசனையை கேஜ்ரிவாலே கூட சொல்லிக் கொடுத்திருக்கலாம்! ஆட்டத்தை தொடங்கியாயிற்று! இன்னும் காட்சிகள் அதிகம் காண வேண்டியுள்ளது!