திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!

திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை திரும்பப் பெற்றது.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோவில் மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கோவில் முழுமையாக மூடப்படும் என்றும், பக்தர்கள் எவருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதில் மர்மம் இருப்பதாக திருப்பதி ஆலய பிரதான அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு குற்றம் சாட்டினார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடமுழுக்கு நடத்துவதற்காக கோவில் மூடப்படும் என்று அறிவித்திருப்பது, இந்நாட்களில் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

திருப்பதி ஆலய நகைகள் மாயமான விவகாரம் மற்றும் கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாங்கள் கேட்டிருப்பதால், தடயங்களை அழிப்பதற்கான முயற்சியில் தேவஸ்தானம் ஈடுபடுவதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

ஆனால், தேவஸ்தான நிர்வாகிகளோ, திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போது வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்றும், ஆனால் தற்போது #தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் தரிசனத்துக்காக வருவதாகவும், எனவே கும்பாபிஷேக விழாவின் போது அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர்.

திருப்பதி ஆலய வரலாற்றில் முதல் முறையாக கோவில் முழுவதும் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தேவஸ்தானத்தை வற்புறுத்தினார். இதை அடுத்து தனது அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் திரும்பப் பெற்றது. அதன்படி, ஆகஸ்ட் 11,12 தேதிகளில் சிறுசிறு குழுக்களாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளது. இருப்பினும், தேவஸ்தானத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாக பக்தர்கள் புகார் கூறி வருகின்றனர்.