பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 134 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 4,670 கன அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் 5,539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை முதலே மழை பெய்தது. இதனால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.
பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை நெருங்கி வருவதால், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழுவினர் அணையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து இதே நிலையில் இருந்தால் நாளை நீர்மட்டம் 136 அடியை எட்டிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தாலும் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிடும். பின்னர், பலத்த மழை பெய்து வரும் கேரளாவுக்கு தண்ணீரை வீணாக திறக்க வேண்டியிருக்கும். இதனால் அதிகாரிகள் நேற்று முதலே வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரை திறந்துள்ளனர். 4 ராட்சதக் குழாய்கள் வழியாக தலா 400 கனஅடி வீதம் 1,600 கனஅடி மட்டுமே திறப்பது வழக்கம். இந்த தண்ணீரில் இருந்துதான் லோயர் கேம்பில் மின்சாரம் தயாரிக்கப்படும்.
இத்துடன் இரைச்சல் பாலம் வழியாக 700 கனஅடி கூடுதலாக திறந்து, வைகை அணையில் சேமிக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பதை தவிர்க்கும்போது மட்டுமே இரைச்சல் பாலத்தில் தண்ணீர் திறக்கப்படும்.