ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் புகழ்பெற்ற வசனம் என்ன கூறுகிறது எனில், “ஒரு மனிதன், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாவிட்டால், அவன் தன்னை மனிதன் என்று கூற உரிமையில்லாதவன் ஆகிறான்” என்று எம்.பி. ஜெயதேவ் கல்லா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கல்லா, “ஆந்திர மாநிலத்திற்கு மோடி காட்டிய பாகுபாட்டிற்கு எதிரான போர் இது. மத்திய அரசுக்கு எதிரான தர்மயுத்தம் இது. நியாயமின்மை, நம்பிக்கை இல்லாமை, முன்னுரிமை இல்லாதது, நடுநிலை அணுகுமுறை இல்லாதது என பாகுபாடு காட்டி நடந்து கொண்ட மத்திய அரசு மீது ஆந்திர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜனநாயகமற்ற வழியில் ஆந்திர பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டது. நிச்சயமற்ற நிலையில் இருந்து எங்களுக்கு நிவாரணம் தேவை. மோடியின் ஆட்சி நமக்கு இன்னும் நிச்சயமற்ற தன்மையையும், சவால்களையும் உருவாக்கி வருகிறது.
ஆந்திர பிரதேசம் ஒரு தென் மாநிலம். அதன் வளர்ச்சி இயந்திரமே அதன் தலைநகரமான ஹைதராபாத் தான். அங்கு மிகப்பெரிய வளர்ச்சி உருவாக்கப்பட்டு இருந்தது. ஆந்திரா முழுவதும் உள்ள மக்களின் பங்களிப்போடு அந்த வளர்ச்சி உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது குறைந்த மக்கள் தொகை கொண்ட தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் வளர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
எங்களுடைய கோரிக்கை எல்லாம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது தான். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எங்களுக்கு அளித்த 6 உத்தரவாதங்களில் இதுவும் ஒன்றாகும். அதைத் தான் நாங்கள் கேட்கிறோம்.
பாஜக தங்களது தேர்தல் அறிக்கையில், பத்து வருடங்களுக்கு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தது. நீங்கள் எப்போதும், எல்லா மக்களையும் முட்டாளாக்க முடியாது.
எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்” என்று எம்.பி. ஜெயதேவ் கல்லா தெரிவித்தார்.