தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து பேசினார். போலீஸார் சுட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததாக கனிமொழி பேசியதற்கு, அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை சமாதானப்படுத்திய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கனிமொழியை தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி அளித்தார். தொடர்ந்து பேசிய கனிமொழி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்றும், தற்போதும் தூத்துக்குடியில் போலீஸ் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த வாரம் தூத்துக்குடி சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, எட்டு வழிச்சாலை அமைப்பது பற்றி யார் கேள்வி கேட்டாலும், கைது செய்யப்படுவதாக கூறினார். அதிலும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.