காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதனால் அம்மக்கள் அச்ச உணர்விலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிராக பா.ஜ.க அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்களின் பேச்சுக்களால் அதிகமான தாக்குதல் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படுகிறது. அவர்கள் மீதான தாக்குதலுக்கு பொதுமக்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இதைத் தடுக்க அந்த மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அச்ச உணர்வில் இருக்கும் மக்களை நாம் சந்தித்து, அவர்களிடம் உள்ள அந்த அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து ஆய்வு செய்து உதவி செய்வது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாகும். பா.ஜ.க அரசால் கட்டவிழுத்து விடப்பட்டிருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்த வேண்டும். இதுபோன்ற விவகாரங்களை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் பணி நம்முடையது” எனக் கூறியுள்ளார்.