புது தில்லி : ஆதார் சேவை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனம் UIDAI – உடாய் மைய சேவை உதவி எண் 18003001947, ஆண்ட்ராய்டு போன்களின் போன்புக்கில் தானாக பதிவாகியுள்ளது என்றும், இது ஹேக்கர்களின் எண் என்றும் உடனே இதை டெலிட் செய்யவேண்டும் என்றும் நேற்று திடீரென சர்ச்சை எழுந்தது.
சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் போன்களில் இவ்வாறு தானாக ஆதார் மைய பழைய உதவி எண் 18003001947 பதிவாகி இருப்பதாக, போன் புக் ஸ்க்ரீட் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மொபைல் போன்களுடன் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், எனவே தான் அது தானாக பதிவானதாக சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் இதனை ஆதார் ஆணையம் மறுத்தது.
1947 என்ற எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும், உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் தாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்த தகவல்கள் நேற்று ஊடகங்களில் பலத்த விவாதத்தைக் கிளப்பின.
இந்நிலையில் ஆதார் உதவி எண்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுளே காரணம் என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்தது. தங்களது இந்தச் செயலுக்காக கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் 2014இல் உடாய் சேவை எண்ணும் 112 என்ற பேரிடர் உதவி எண்ணும் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் setup wizardல் கோடிங் செய்யப்பட்டதாகவும், இது கவனக் குறைவால் நேர்ந்த பிழை என்றும் குறிப்பிட்டுள்ள கூகுள் நிறுவனம், தற்போது வரை இது தொடர்வதகாவும் தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கூகுள் நிறுவனம், பயனாளர்களின் ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என உறுதி கூறுவதாகவும் இன்னும் சில வாரங்களில் இப்பிரச்சினை சீர் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த எண் ஹெக்கர்களால் பதிவு செய்யப் படுவதாகவும், இந்த எண்ணை உங்கள் மொபைல் போன்களில் செக் செய்து, அப்படி இருந்தால் உடனே டெலிட் செய்துவிடுங்கள், இது உங்கள் போன்களில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து திருடிவிடும் என்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.