காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்…
புது தில்லி: கடந்த நான்கு ஆண்டு பாஜக., ஆட்சியில் பெரிதாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க இயலாத நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்காக அது கையில் எடுத்திருக்கும் விவகாரங்கள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், பொருளாதாரத்தில் தேக்க நிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி மோசடிகளைச் செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் … என இவற்றை முன்வைத்து தேசிய அளவில் பிரசாரம் செய்யப் போகிறதாம்.
தில்லியில் சனிக்கிழமை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப் பட்டது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருப்பதாக பாஜக பட்டியலிட்டு வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பாஜக., மீது ஊழல் புகார்களைத் தெரிவித்து அதன் சாதனைகளை மறைக்கலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காரியக் கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆஸாத், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடல் நலக் குறைவால் சோனியா இதில் பங்கேற்கவில்லை.
ராகுல் காந்தி அமைத்த புதிய காரிய கமிட்டியின் இரண்டாவது கூட்டம் இது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், முறைகேடு குற்றச்சாட்டுகள் இவற்றை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டிருக்கும் பதிவுகளில், “நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஊழல் விவகாரங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் மத்திய அரசு அடைந்த தோல்வி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதற்கு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.