காங்கிரஸ் காரிய கமிட்டி…
புது தில்லி: காங்கிரஸ் ஆட்சியில் தான் வெளிநாட்டினர் அதிகம் நாடுகடத்தப் பட்டனர் என்று கூறியுள்ள அக்கட்சி, தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ராஜீவ் காந்தி கொண்டு வந்த திட்டம் என்று கூறியுள்ளது.
தில்லியில் சனிக்கிழமை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப் பட்டது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருப்பதாக பாஜக பட்டியலிட்டு வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பாஜக., மீது ஊழல் புகார்களைத் தெரிவித்து அதன் சாதனைகளை மறைக்கலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
மோடி தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில் நடந்துள்ள ஊழல்கள், மோசடிகள் குறித்து நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற தொழிலதிபர் மெஹுல் சோக்ஸிக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு முன்பு அவரது பின்னணி குறித்து கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாடு விசாரித்த போது, சோக்ஸியின் மோசடி தொடர்பான தகவலை இந்தியா அளிக்கவில்லை என்று ஆண்டிகுவா அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே மெஹுல் சோக்ஸி விவகாரத்தில், மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ, அந்த விமானம் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து முழுதாகத் தெரிவிக்கவில்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ., அரசால் அந்த விமானம் ஒன்று ரூ.526 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தேஜகூ., அரசால் அந்த விமானம் ஒன்று ரூ.1,676 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு கருவூலத்துக்கு ரூ.48,000 கோடி நஷ்டம் ஏற்படும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த திட்டம். கடந்த 1985ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கையெழுத்திடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் இது. இந்தப் பதிவேட்டில் இந்திய குடிமக்களின் பெயர் விடுபடாமல் இருப்பதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2005 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில், 82,728 வெளிநாட்டினர் (வங்கதேசத்தவர்) நாடு கடத்தப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசில் கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 1,822 வெளிநாட்டினரைத் தான் நாடு கடத்தியுள்ளது… என்றார் ரண்தீப்
சுர்ஜேவாலா.