கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காட்டில் ஆற்றில் பாலத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவுக்குப் பெருவெள்ளம் பாய்கிறது. அபாய அளவைத் தாண்டி வெள்ளம்பாயும் நிலையிலும் அந்தப் பாலத்தில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் தேனி மாவட்டம், கேரளத்தின் இடுக்கி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் கடும் மழை பெய்து வருகிறது. இடுக்கி அணை நிரம்பியுள்ளதால் அணையின் மதகுகள் வழியாக நொடிக்கு நாலாயிரத்து நானூறு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் இடுக்கி, எர்ணாக்குளம் மாவட்டங்களில் பெரியாற்றங் கரையோரத்தில் உள்ள பல ஊர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளப்பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான மற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாக்குளம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் மழைபெய்வதால் இடுக்கி மாவட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணூர் பல்கலைக்கழகம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மழை வெள்ளம் ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.