24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது
கர்நாடகாவிலும் கேரளாவிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பி வழிந்தன.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப் பட்டதால், மேட்டூர் அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல கேரள மாநிலம் வய நாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்த தால், நிகழாண்டில் இரண்டாம் முறையாக இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. காவிரி, கபினி ஆகிய இரு ஆறுகளிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் நிரம்பி வழிகின்றன.
இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அனைத்து மதகுகள் வழியாகவும் நீரை வெளியேற்றி வருகின்றனர். காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்டுள்ள கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கே.ஆர்.எஸ் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அதிகமாக வந்துகொண்டு உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 87,464 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது
இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. அதே போல் கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் 40,380 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் 1,40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.
கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் தேசிய பேரிடர் மீட்புக் குழு உதவியை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.